jump to navigation

வீ.தி.சம்பந்தன் செப்டம்பர் 9, 2006

Posted by chandransblog in தினமும் ஒரு தகவல்.
1 comment so far

மலேசிய தமிழர்களின் பெருந்தலைவராக விளங்கியவர் துன்.வீ.தி.சம்பந்தன். 1919-ம் ஆண்டு, செல்வமிகுந்த குடும்பத்தில் பிறந்தார். தமிழகத்தில் தன் பட்டப் படிப்பை தொடர்ந்த சம்பந்தனுக்கு, அரசியல் ஈடுபாடும் அங்குதான் ஆரம்பமாகியது.

மலேசிய இந்தியர் காங்கிரஸில் (ம.இ.கா) தன்னை ஈடுபடுத்திக் கொண்ட, சம்பந்தன், 1955-ம் ஆண்டில் அதன் தேசிய தலைவரானார். மலேசிய இந்திய மக்களில், 80%-க்கும் மேலானோர் தமிழர்களாக இருக்கும் நிலையில், ஒரு தமிழர் தலைவராக தேர்வு பெற்றது, காலம் கடந்ததுதான் என்றாலும் கூட, அது சரியான தேர்வுதான்.

சம்பந்தன் செய்த மாற்றங்களில் மிக முக்கியமானது, ம.இ.காவில், தமிழர்களுக்கு முக்கிய இடத்தை பெற்றுத் தந்தது ஆகும். ஆகவே, மலேசிய தமிழர்களை முழுமையாக ஒன்றிணைத்த பெருமையில், கோ.சாரங்கபாணியுடன், சம்பந்தனுக்கும் மிக முக்கிய் இடம் உண்டு.

மற்ற அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன், மலேசிய நாட்டிற்கு சுத்ந்திரம் பெற்றுத் தந்ததிலும், சம்பந்தன் மிகப் பெரிய பங்காற்றியிருக்கிறார். ஆங்கிலேயர்களுடன் செய்து கொண்ட சுதந்திர ஒப்பந்தத்தில் சம்பந்தனின் கையெழுத்தும் உள்ளது என்பது, உலகத் தமிழர்கள் எல்லாரும் பெருமை படக் கூடிய விஷயமே!

சுதந்திரத்துக்கு பிறகு, மலேசியத் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பிரச்சனை, தோட்டத்துண்டாடல் ஆகும். பெரும்பாலான் தமிழர்கள், ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் பட்சத்தில், இந்தத் தோட்ட துண்டாடல்களினால், அவர்களது எதிர்காலம் பெரிய கேள்விக்குரியானது.

‘நாம் ஏழைகள் ஆனாலும்; கோழைகள் அல்ல!’ என்ற தாரக மந்திரத்தை முன் வைத்து, அந்த ஏழைத் தொழிளாலர்களிடம், கூட்டுறவு தத்துவத்தின் மூலம், சிறுகச் சிறுக பணம் சேர்த்து, பல தோட்டங்களை வாங்கி, தமிழர்களையும் தோட்டங்களுக்கு சொந்தக்காரர்களாக்கியவர் துன் சம்பந்தன். அவர் அமைத்த அந்த கூட்டுறவு இயக்கம்தான், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம். இன்று இந்த கூட்டுறவிற்கு கோலாலும்பூரில் வானளாவிய கட்டிடம் ஒன்று உள்ளது குறிப்பிடத் தக்கது.

1973-ம் ஆண்டு ம.இ.காவிலிருந்து பதவி விலகிய துன் சம்பந்தன், மலேசிய அரசாங்கத்தின் மிக பெரிய பொறுப்பில் சில ஆண்டுகள் இருந்து, 1979-ம் ஆண்டு மரணமடைந்தார்.

கோலாலும்பூரில் உள்ள முக்கிய சாலை ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்பட்டு, அவரது பெயர் தினமும் உச்சரிக்கப் படுகிறது.

மலேசிய தமிழர்களின் மிக முக்கிய பெருந்தலைவர் துன் சம்பந்தன், எங்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருப்பார்.

மறுபடியும் வந்து விட்டேன்! செப்டம்பர் 6, 2006

Posted by chandransblog in தினமும் ஒரு தகவல்.
add a comment

வேலை பளு காரணமாகவும், உடல் நிலை காரணமாகவும், என்னுடைய பதிவை எழுத முடியாமல் போய்விட்டது.

தமிழர்கள் மலேசியாவிற்கு வந்து இருநூறு ஆண்டுகளாகி விட்டது. நான் சொல்லுவது ஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்கு வந்த பிறகு. இந்த இருநூறு ஆண்டுகளில், நாங்கள் பல மாற்றங்களை சந்தித்து விட்டோம்.

இத்தனைக்கும் தமிழர்கள் இந்த நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 8% தான். போருளாதார வலிமை இல்லாமலும், அரசியல் ஆதரவு இல்லாமலும், ஒர் இனம், தன்னுடைய அடையாளத்தை இழக்காமல், ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்திருக்கிறது என்றால், என்னைப் பொருத்தவரை அது ஒரு சாதனைதான்.

தமிழ் மொழி இந்நாட்டில் வாழ்கிறது. தமிழ் பள்ளிகள் இந்த நாட்டில் இருக்கின்ற்ன. பெரிய பள்ளிகள், குறிப்பாக நகரத்தில் இருக்கும் தமிழ் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை, சில ஆண்டுகளாக கூடி வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயமே. தமிழ் இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியல்ல! தமிழுக்கு பொருளாதார வலிமையும் கிடையாது. ஆனால் தமிழ் இந்த நாட்டில் செழிக்கிறது!

தமிழ் கலை, கலாச்சார, மொழி சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் மலேசியாவில் அதிகம் நடை பெறுகின்றன. சிங்கப்பூர், இந்திய மற்றும் அனைத்துலக தமிழர்கள் சம்பத்தப்பட்ட நிகழ்வுகள் கூட ஆண்டு தோறும் இங்கு நடைபெறுகின்றன.

ஆமாம். பல நிலைகளில் நாங்கள் போதிய வளர்ச்சி பெறவில்லை. தற்கொலை, வன்முறை எங்களிடையே அதிகமாகத்தான் இருக்கின்றன. ஆனால், இவை நாளடைவில் குறைந்து விடும். நாங்கள் இருக்கும் சமூக, பொருளாதார சூழ்நிலைகளும்தான் அதற்கு காரணம். ஆனால் இவை நிரந்தரமானவை அல்ல.

ஆனாலும் அரசாங்கத்தின் ஆதரவு மிக மிக குறைவாக இருக்கும் பட்சத்தில், எங்களின் பொதுவான வளர்ச்சி பெருமைக்குரியதே!

மறுபடியும் சந்திப்போம்.

மலேசிய தமிழர் வரலாறு ஆகஸ்ட் 28, 2006

Posted by chandransblog in தினமும் ஒரு தகவல்.
1 comment so far

மலேசிய தமிழர் வரலாறு என்றதும், நான் ஏதோ பெரிதாக ஆராய்ச்சி கட்டுரை எழுதி விடப் போகிறேன் என்று விடாதீர்கள்

தமிழர்கள் மலேசியாவிற்கு பெருமளவில் வரத் தொடங்கியது, ஆங்கிலேயர்கள் இங்கு வரத் தொடங்கிய பிறகுதான். 1870-ம் ஆண்டிற்கு பிறகுதான் இது தொடங்கியது. அந்த எண்ணிகையையை கீழே பார்க்கவும்:

1870 – 60,000 பேர்
1901 – 120,000 பேர்
1947 – 600,000 பேர்
1957 – 850,00 பேர்

மேலே உள்ள எண்ணிக்கையில், 85% தமிழர்கள். இந்த தமிழர்கள் எங்கள் நாட்டின் வளர்ச்சியில் பெரும் – மிகப் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள். இன்றைக்கும் எங்களுடைய பங்கு குறிப்பிடத் தக்கதே. ஆனாலும் இதனை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

காட்டை அழித்து, ரப்பர், காப்பி தோட்டங்களாக மாற்றி, இந்த நாட்டை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியவர்கள் எங்கள் முன்னோர்.

நல்ல தலைமைத்துவம் இல்லாத ஒரே காரணத்தால், நல்லவர்களாக வாழ்ந்த அவர்களால், வல்ல்வர்களாக மாற முடியாமல் போய் விட்டது. ஆனாலும் வீ.தி. சம்பந்தன், கோ.சாரங்கபாணி போன்றவர்கள், தமிழர்களின் விடிவெள்ளியாக தோன்றி, நாங்களும் இந்த நாட்டில் இருக்கிறோம் என்பதனை உணர்த்தினர்.

இன்றைக்கு, தேர்தல் காலங்களில் மட்டும் மூன்றறவது முக்கிய இனமாக கருதப்படும் நாங்கள், மற்ற காலங்களில் மறக்கப் பட்டு, மறைக்கப் பட்டே வருகிறோம். ஆனாலும்,
வரலாறு எங்களை மறக்காது.

மலேசிய தமிழர்களின் எதிர்காலம் மகத்தானதாக இருக்கும்.

மலேசிய தமிழர்கள் ஆகஸ்ட் 27, 2006

Posted by chandransblog in தினமும் ஒரு தகவல்.
1 comment so far

மலேசியாவில் ஏறக்குறைய 1.5 மில்லியன் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆரம்பத்தில் ரப்பர் தோட்டங்களிலும், பொது மராமத்து துறைகளிலும் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து மலை நாட்டிற்கு தமிழர்கள், ஆங்கிலேயர்களால் கொண்டு வரப் பட்டனர்.

இன்றைக்கு தமிழர்கள் பல துறைகளிலும் பணிபுரிகின்றனர். பொதுவாக, மலேசிய அரசாங்கத்தின் உதவி மலேசிய தமிழர்களுக்கு மிக மிகக் குறைவாகவே கிடைக்கிறது. தமிழர்கள் இங்கு உண்மையான பிரஜையாக நடத்தப் படவில்லை என்பதே முற்றிலும் உண்மை. பொருளாதார பலமும் இல்லாமல், அரசியல் பாதுகாப்பும் இல்லாமல், தமிழர்கள் மலேசியாவில் இன்றைக்கு வாழ்கிறார்கள் என்றால், அது சாதனைக்கு உரிய ஒன்றே! அது எங்களின் பலமும் கூட.

எங்களிடையே இன்றைக்கு பல பிரச்சனைகள். வேலை இல்லாமை, வறுமை, வன்முறை, தலைமைத்துவம் என்று பல. அரசு சார்பற்ற (NGO) இயக்கங்களில் தமிழர்களுடைய பங்களிப்பு மிகவும் பாராட்டுக்கு உரியது. ஈழத் தமிழர்கள் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ் நாளிதழ்கள், வார மாத இதழ்கள் இங்கு நிறைய வெளிவருகின்றன. 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் இருக்கின்றன. ஆனாலும் பல பள்ளிகளின் நிலை மோசமாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் தமிழ் வாழ்கிறது; வாழும்.

தமிழகத்திலும் இலங்கையிலும், தமிழர் சம்பந்தப்பட்ட செய்திகளை நாங்கள் கூர்ந்து கவனிக்கிறோம்.  

மலேசிய தமிழர்களை பற்றி நிறைய சொல்லலாம். சொல்ல வேண்டும். அதனை நான் சொல்லுவேன்.

என்னுடைய வலைப்பதிவு! ஆகஸ்ட் 26, 2006

Posted by chandransblog in Blogroll.
3 comments

ஆம்! இது  என்னுடைய வலைப்பதிவு.

தமிழில் நிறைய வலைப்பதிவுகள் இருந்தாலும், எனக்கென்று ஒரு தனி வலைப்பதிவு வேண்டும் என்ற ஆசை இப்பொழுது நிறைவேறி விட்டது.

எல்லாரையும் போல என்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை, என்னை பாதித்த சம்பவங்களை, என் பார்வையில் பதிந்த விஷயங்களை, என் கண்ணோட்டத்தில் சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய முக்கிய எண்ணம்.  

இதில் எத்தனை விஷயங்கள் உங்களை கவருமென்று எனக்குத் தெரியாது. அதனை தெரிந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன்.

ஆங்கிலத்தில் எனக்கு நல்ல புலமை இருந்தாலும், தமிழில் என்னுடைய வலைப்பதிவை உருவாக்குவதை நான் விரும்புகிறேன்; பெருமைப் படுகிறேன். நான் ஒரு தமிழன் என்பதுதான் அதற்கு முதல் காரணம்.

நான் ஒரு காலேஜில், ஆங்கில பாட விரிவுரையாளராக இருக்கிறேன் (மலேசியாவில்). ஆங்கிலம் எவ்வளவுதான் சிறந்த மொழியாக இருந்தாலும், தமிழில் உள்ள இனிமை அதில் இல்லை. இந்த தருணத்தில், என்னை தமிழ் பள்ளிக்கு, ஆரம்ப கல்வி பயில அனுப்பி வைத்த என் அப்பாவை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

Follow

Get every new post delivered to your Inbox.